நெய்வேலி அனல் மின் நிலைய பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள் உறுதி அளித்ததாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நெய்வேலி அனல் நிலையத்தில் இளநிலை பொறியாளர்கள் பணியில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து, நெய்வேலி அனல் மின் நிலைய அதிகாரிகளுடன் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி இன்று ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆலோசனையில் தமிழ்நாடு அரசு தரப்பில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பங்கேற்றார், அதன பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு, தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கையை மத்திய அமைச்சருடன் எடுத்துரைத்த போது இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் இளநிலை பொறியாளர்கள் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவது எனவும் இந்த முறை இளநிலை பொறியாளர் தேர்வுக்கு 5.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் எனவும் கூறியதாக தெரிவித்தார்.
இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 1.12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை 3,830 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் என்.எல்.சி அதிகாரிகள் தெரிவித்தனர். அகில இந்திய அளவில் தேர்வு வைக்கப்பட்டு எடுக்கப்படும் பணியில் தமிழகம் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும், நெய்வேலி அனல் மின் நிலையத்திற்காக நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1,300 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் 15,000 ஒப்பந்த தொழிலாளர்களில் 14,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறிய என்.எல்.சி அதிகாரிகள், ஏற்கனவே ஒப்பந்த பணியாளர்களாக இருந்த 1,100 பேருடைய பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
நெய்வேலி அனல் மின் நிலைய வேலை வாய்ப்புகளில் 90 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் டி,ஆர்.பாலு எடுத்துரைத்துள்ளார்.
பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என என்.எல்.சி அதிகாரிகளும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் கூட்டத்தில் தம்மிடம் உறுதியளித்ததாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறினார்.