கொரோனா பரவல் காரணமாக நிலவிய மோசமான நிலை சற்று தணிந்துள்ளது, இனி எந்த நாட்டிற்கும் எந்த ஒரு தடையும் இன்றி பயணம் செய்யலாம். மேலும் வணிக மற்றும் பொழுதுபோக்கு பயணங்கள் உலகம் முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வருவதால் விமான நிறுவனங்கள் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன. அப்படி இருந்தும் ஏன் விமான டிக்கெட் கட்டணம் இன்னமும் அதிகமாக உள்ளது?
1. கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது, பயணத்திற்கான தேவை மிகவும் மந்தமாக இருந்ததால், விமானத்தின் சேவை பெரிய அளவில் தேவைப்படவில்லை. இதனால் விமான நிறுவனங்கள் தங்கள் விமானத்தின் பெரும்பகுதியை செயலிழக்கச் செய்துள்ளன. இப்போது பயணத்திற்க்கான தேவை வந்தபோதும் அவற்றை விரைவாகக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது.
2. பெரியளவில் விமான சேவை இல்லாத காலகட்டத்தில் ( கோவிட் நேரம் ), பல விமான பயணிகள் பலர் பணத்தின் மதிப்பையெல்லாம் பெரியளவில் எடுத்துக்கொள்ளாமல் டிக்கெட்டிற்கு அதிக விலை கொடுத்து பயணத்தை மேற்கொண்டதோடு, சில சந்தர்ப்பங்களில் 3 ஆண்டுகள் வரை டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த நுகர்வோர் தயாராக இருந்திருக்கிறார்கள். இதனால் அப்போது புக் செய்யப்பட்டதன் விளைவு இன்றளவும் பயண டிக்கெட்டுகளின் விலை குறையாமல் உள்ளதாம்.
3. கோவிட் நோயால் விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு இழப்புகளைச் சந்தித்தன மற்றும் பத்து மில்லியன் விமானப் பணிகள் சேவைகள் இல்லாததால் அகற்றப்பட்டன. இதனால் பல ஊழியர்கள் பணி இழந்தனர். ஆனால் தற்போது விமான பயண சேவை அதிக அளவில் துவங்கிவிட்டாலும், வரும் பயணிகளுக்கு சேவை செய்ய தொழில்துறையினர் போதுமான அளவு ஊழியர்களை பணியமர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பணி புரிந்து அனுபவம் பெற்றிருந்தவர்களும் கோவிட்க்கு பிறகு மிகவும் நிலையான வேலைகளை ஏற்றுக்கொள்வதற்கு வாழ்க்கையை முழுவதுமாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.
4. கடந்த ஆண்டில் எரிபொருள் விலைகள் சற்று குறைந்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலை கடந்த 2019 ஜனவரியில் இருந்ததை விட 50% அதிகமாக உள்ளது, இது எரிபொருளின் மிகப்பெரிய விலை என்பதால் விமான நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய நிதிநிலை சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு போன்ற தொடர் நிகழ்வுகளால் ஏற்படும் விலை உயர்வு, அதிக அளவு பாதிப்பினை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
5. 2050 ஆம் ஆண்டுக்குள் தூய்மையான எதிர்காலத்திற்காக அனைத்து விமானங்களும் கார்பன் நியூட்ரல் ஆக மாற தொழில்துறை விமான நிறுவனங்கள் $2 டிரில்லியன் செலுத்த வேண்டும் என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
6. இதற்கிடையில், சில தொழில் நிறுவனங்கள் புதிய முயற்சியாக, மாசற்ற பயணத்தை மேற்கொள்வதற்க்காக மின்சார மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் விமானங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் உள்ளனர், ஒருவேளை அவைகள் பலனளிக்கும் பட்சத்தில் அந்த விமானங்களின் பயண டிக்கெட் விலையும் அதிகப்படியாகத்தான் இருக்கும் .
7. இன்றளவும் சீனா கொரோனாவில் சிக்கி தவிப்பதால், சுற்றுலா செலவினங்களில் கிட்டத்தட்ட 280 பில்லியன் டாலர்களின் ஆதாரமான சீனா இன்னும் நெருக்கடியில் தான் தத்தளிக்கிறது. மேலும் அந்நாட்டில் கோவிட் அணுகுமுறை கைவிடப்பட்ட பின்னரும் மக்கள் மீண்டும் பயணிக்கும் அபாயத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்ற அடிப்படையில் சீனா முற்றிலும் முடங்கி கிடப்பதால் சர்வதேச வழித்தடங்களில் குறைவான இருக்கைகள், தேவை குறைதல் மற்றும் விமானக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா









