கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்மொழியை கற்றுக்கொடுப்பதற்காக தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ் கற்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், தமிழை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு என நிதி ஒதுக்கி, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதில், அகரம் முதல் சிகரம் வரை பல படிநிலைகளாக பாடங்கள் கற்பித்து, சான்றிதழ் தேர்வு நடத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளவும், வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்படுள்ளது. மேலும், தமிழ் பரப்புரை கழகம் மூலம் தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சார பரப்புரைப் பணிகள், மற்றும் ஒலி – ஒளி உச்சரிப்புடன் பாடப்புத்தகத்தை வடிவமைத்தல் ஆகிய பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.







