உத்திரப்பிரதேசத்தில் 15 வயதே நிம்பிய சிறுவன், உலகின் நீளமான தலைமுடி வைத்திருப்பதற்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைக்கும் பலரைப் பற்றி நாம் சமூக வலைதளங்களின் மூலம் அறிந்திருப்போம். ஏதாவது வினோதமான முயற்சி செய்து சாதனை படைப்பது தற்போது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. அதே போன்று 15 வயது சிறுவன் செய்த கின்னஸ் சாதனை சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த சிறுவனின் பெயர் சிதக்தீப் சிங் சாஹல், அவர் தனது வாழ்நாளில் முடி வெட்டிக்கொண்டதே இல்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், பதின்ம வயது பெண்களை விட மிக நீளமான கூந்தலை வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சிதக்தீப் பின் சாதனையை கின்னஸ் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் கூறும்போது, ‘என்னுடைய தலைமுடி மிகவும் நீளமாக, அடர்த்தியாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அவர்களின் தலைமுடி அப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நான் சீக்கிய மதத்தை சார்ந்தவன். இது கடவுளின் பரிசு. சீக்கிய மதத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, தலைமுடியை பராமரிப்பது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாஹல் தனது தலைமுடியை தனியாக கழுவுவதற்கு சுமார் 20 நிமிடங்களும், உலர இன்னும் அரை மணி நேரமும் ஆகும் என்று கூறுகிறார். அதன் பிறகு, காயவைப்பதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும் என்று கூறுகிறார். இருப்பினும் அவரது தாயார் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவுகிறார். சாஹல் கூறுகையில், ‘இவ்வளவு நீளமான முடியை கையாள்வது கடினம். என் அம்மா இல்லாவிட்டால் இந்த சாதனை விருது எனக்கு கிடைத்திருக்காது.” என்று தெரிவித்தார்.
மேலும் சிறுவயதில் இருந்தே தனது நண்பர்கள் தன்னை இவ்வாறு முடி வளர்ப்பதற்காக விமர்சனம் செய்ததாகவும், ஆனால் தற்போது தனக்கான அடையாளமே இந்த முடி தான் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது தலைமுடி தற்போது, 146 செமீ (4 அடி 9.5 அங்குலம்) நீளத்திற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் உலக சாதனைகள் 2024 புத்தகத்தில் தனது சாதனை ஒரு பகுதியாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.







