லண்டன் பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சர் விஜய் தனது லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு ஈர்த்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றிருந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது 7 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழ்நாடு அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

லண்டன் பயணத்தின்போது முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார்.

செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்புகளின் தொடர்ச்சியாக, வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் மற்றும் நோக்கக் கடிதங்கள் மூலம் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும் எனவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு சென்ற முதல்வர் விஜய் அங்கு நடைபெற்ற கார் பந்தயத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது நடிகர் அஜித் குமாரை சந்தித்துப் பேசிய நிகழ்வும் கவனம் பெற்றது. முதல்வர் விஜய் ,நடிகர் அஜித் குமார் சந்திப்பு தொடர்பான காட்சிகள் தமிழகத்தில் அஜித்,விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாகவும், தமிழகத்தை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதல்வரின் லண்டன் பயணம் அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள முதல்வர் விஜய் இன்று மாலை நடைபெறும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.