கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கன்னட சின்னத்திரையில் இளம் நடிகையாக இருந்த சேத்தனா ராஜ், கீதா, தோரேசானி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். பெங்களூருவை சேர்ந்த வீரேனபாளையா கிராமத்தை சேர்ந்த சேத்தனா ராஜ், உடல் பருமனாக காணப்பட்டதால், கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு எடுத்தார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி பெங்களூரு ராஜாஜிநகர் நவ்ரங் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, வேறொரு இருதய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேத்தனா ராஜ் உயிரிழந்தார்.
சேத்தனா ராஜ் உயிரிழந்த விவகாரம் பூதகரமாக வெடித்ததும், உடல் ஒத்துழைக்காததால், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சேத்தனா ராஜ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷெட்டி காஸ்மெடிக் சென்டருக்கு பாலிகிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கு உண்டான உரிமம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், சேத்தனா ராஜ் இயற்கைக்கு மாறாக உயிரிழந்துள்ளார் என சுப்பிரமணிய நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஷெட்டி காஸ்மெடிக் சென்டர் மற்றும் மருத்துவர் ரெட்டி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.







