எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்குதான் வாக்கு: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது…

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு, தொழிற்சாலை அபகரிப்பு என அடுத்தடுத்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார். ஜெயக்குமார் கைதை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய  பழனிசாமி, “அதிமுக தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

தேர்தலில் தில்லுமுல்லு செய்து சதித்திட்டம் தீட்டி திமுக வெற்றிபெற்றுள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி,  கள்ள ஓட்டு போட முயன்றவர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார், கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்த ஜெயக்குமார் சிறையில் உள்ளார், கள்ள ஓட்டுப்போட முயன்றவரை பிடித்துக் கொடுப்பது குற்றமா எனவும்  கேள்வி எழுப்பினார்.

திமுக ஜனநாயக முறைப்படி வெற்றிபெறவில்லை, கள்ள ஓட்டு போட்டுதான் வெற்றி பெற்றுள்ளது என்ற அவர்,  “வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து  பெற்ற வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதில் வல்லமை பெற்றவர்கள். சென்னையில் அதிகமான இடங்களில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளது, எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்கு தான் வாக்கு விழுந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்,

தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டது, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, தேர்தல் ஆணையம் காவல்துறையும் கைகோர்த்து திமுகவை வெற்றி பெற வைத்தது எனவும் அவர் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.