உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். திமுக அரசு, காவல்துறையை கைப்பாவையாக பயன்படுத்தி அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் குறித்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை துச்சமென மதிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முழுவதுமாக நிறைவேற்றி, தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது.







