கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
கொரோனா தொற்று 3-ஆம் அலை வேகமாக பரவி வருவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னையில் மட்டும் 9 ஆயிரம் தெருக்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் நோயின் தாக்கம் மேலும், அதிகரிக்கும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பாணையும் வெளியிடவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள நிலையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் 2021-ல் அனுமதி அளித்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 26-ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பாதுகாப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் குறிப்பிடப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்ப்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், உச்சநீதிமன்றம் ஜனவரி 27-ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட அறிவுறுத்தியுள்ளதே என கேள்வி எழுப்பினர். மேலும், வரும் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதுவரை இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.








