ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கணக்கில் வராத ரூ.34 லட்சம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரைகளிலும் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத 33 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்செயல் தேர்தல் நடைபெறும் கோவை மாவட்டத்தில் மட்டும் 8 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 16 கிலோ 400 கிராம் சந்தனக் கட்டைகள், 1,009 மதுபாட்டில்கள், 100 மின் விசிறிகள், 215 புடவைகள், 1,065 துண்டுகள், 205 பித்தளை விளக்குகள், 600 குங்கும சிமிழ்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.








