உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை காஞ்சிபுரத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், தனித்துப் போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன், களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே” என்று தெரிவித்திருந்தார். நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுசேர்க்க நானும் உங்கள் பகுதிக்கு வருகை தரவிருக்கிறேன் என கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
தற்போது உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தனது பரப்புரை தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். தனது ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், மாற்றத்தின் பிரதிநிதிகளாக, மய்ய வேட்பாளர்கள் தமிழகமெங்கும் போட்டியிடுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் கமல்ஹாசன் முதற்கட்ட பரப்புரை பயணத்தை, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து துவங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: