ஊரக உள்ளாட்சித் தேர்தல்; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,…

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்காளர்களும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கு நான்கு வாக்குகளை பதிவு செய்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போது வாக்குப்பதிவு மந்தமாக இருந்த நிலையில், பிற்பகலில் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், முகவர்கள் முன்னிலையில வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வாக்குகள் எண்ணப்படும் இடங்களுக்கு அவை கொண்டு செல்லப்பட்டன. பெரிய அளவில் புகார்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இதற்கிடையே, சில வாக்குச்சாவடிகளில், மாலை 5 மணியளவில், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் அதிகமான மக்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்ததால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குகளை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.