உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஆதார் கட்டாயமா? – தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஆதார் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம்…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஆதார் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், 28 மாவட்டங்களில் தற்செயல் தேர்தலும், வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பூத் சிலிப் இருப்பவர்கள் மட்டுமின்றி, பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு காண்பிக்க வேண்டிய 11 அடையாள ஆவணங்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

அதில், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப்புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூறிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆகிய 11 ஆவணங்களில் ஏதாதவது ஒன்றை காண்பித்து, வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.