சிறுமியின் கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகள் மூலமாக விற்பனை செய்து வந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவரது 2வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி, மற்றும் போலி ஆதார் அட்டை ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் என்பவர் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நேற்று ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல் துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் ஈரோடு காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறையினர் ஈரோடு கணகேஸ்வரி ஏடிஎஸ்பிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்னை மருத்துவ இயக்குனரக இணை இயக்குனர் ( சட்டம்) விஸ்வநாதன் தலைமையில், மருத்துவ துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த மருத்துவமனையில் இருந்து சிறுமி வழங்குவதற்காக வந்த பதிவேடுகள் மற்றும் மருத்துவச் சான்றிதழ்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கும் சிறுமியை அழைத்து சென்றதாக புகார் எழுந்த நிலையில் அங்கும் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அதில், அதிகரிக்கும் பெண் கருக்கொலையைத் தடுத்து நிறுத்தவும், கருமுட்டை வணிகத்தைத் தடுத்து நிறுத்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கருமுட்டை விற்பனையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, கல்வி புகட்டி அவருடைய எதிர்கால வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.








