லண்டனின் ஈஸ்டர்ன் ஐ பத்திரிகை வெளியிட்ட டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல லண்டன் வார இதழான ‘ஈஸ்டர்ன் ஐ’-ல் 2023 ஆம் ஆண்டின் ஆசிய பிரபலங்களின் டாப் 50 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பதான், ஜவான் என அடுத்தடுத்து 2 திரைப்படங்களின் மாபெரும் வெற்றியும், அதன் மூலம் பாலிவுட் திரைத்துறையின் உத்வேகத்தை அதிகப்படுத்தியதும் ஷாருக்கான் முதல் இடம் பிடிப்பதற்கான காரணங்களாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் நடிகை ஆலியா பட் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ‘தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான ஆலியா பட், வெளிநாட்டு ரசிகர்களையும் குவித்திருந்தார். நடப்பாண்டில் ‘சிட்டடெல்’, ‘லவ் அகெய்ன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் பஞ்சாப் திரை நட்சத்திரம் தில்ஜித் தோசன்ஜ் 4-வது இடமும், பாடகி சார்லி XCX 5-வது இடமும் பிடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 6-வது இடம் பிடித்துள்ளார். 7-வது இடத்தில் பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளார்.
8-வது இடத்தின் நடிகர் விஜய் உள்ளார். முதல் 10 இடங்களில் இடம்பெற்றவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் விஜய் மட்டுமே.
இதையும் படியுங்கள் : 14 நாட்களில் ரூ.772 கோடி – வசூல் வேட்டையில் ‘அனிமல்’..!
அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் வஹாஜ் அலி 9-வது இடமும், ‘தி மார்வல்ஸ்’ படத்தில் நடித்த இமான் வெள்ளனி 10-வது இடத்திலும் உள்ளனர். இந்த டாப் 50 பட்டியலில், அமிதாப் பச்சன், அரிஜித் சிங், தீபிகா படுகோனே, அனில் கபூர், அர்மான் மாலிக் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.








