பாத யாத்திரை மேற்கொண்டு சாதித்த அரசியல் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி 3500 கி.மீ தூரம் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து இன்று ஆரம்பிக்கிறார். இதுவரை இந்திய அரசியலில் நடைபயணம் மேற்கொண்ட சில…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி 3500 கி.மீ தூரம் ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து இன்று ஆரம்பிக்கிறார். இதுவரை இந்திய அரசியலில் நடைபயணம் மேற்கொண்ட சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற, மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களில் மிகவும் முக்கியமானது தண்டி யாத்திரை. உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து 1930 ஆம் ஆண்டு, மார்ச் 12 ம் தேதி முதல் ஏப்ரல் 6 ம் தேதி வரை, குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை நோக்கி, 24 நாட்களில், 386 கிலோ மீட்டர் தொண்டர்களுடன், நடைபயணம் மேற்கொண்டார்.

தண்டியில் உப்பை கையில் அள்ளினார். தண்டி யாத்திரைக்கு பிறகு இந்திய மக்கள் மகாத்மா காந்திக்கு முழு ஆதரவளித்தனர். உலகமே திரும்பி பார்த்த நிகழ்வுகளில் தண்டி யாத்திரையும் ஒன்று. தமிழ்நாட்டில் மூதறிஞர் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினமும் திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரை வரை நடைபயணம் மேற்கொண்டனர்.

1938 -39 ஆகஸ்டில், தமிழர் படை என்ற பெயரில் இந்தித் திணிப்பை எதிர்த்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் குமாரசாமி பிள்ளை உள்ளிட்டோர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் இணைந்து தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினர்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் அரசு வெளியேறியது. இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையால் வட மாநிலங்களில் மக்களிடையே பிரிவினையடுத்து மத மோதல்கள் உருவானது. அப்போது மேற்கு வங்க மாநிலம் நவகாளியில் ஆரம்பித்து வங்கம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

1982 ம் ஆண்டு, பிப்ரவரி 15 ம் தேதி மதுரையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயில் வைர வேலை மீட்கவும் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்ம மரணம், சம்பவங்களை விசாரித்த நீதிபதி பால் கமிஷன் அறிக்கையில் , குறிப்பிடப்பட்டவர்கள் மீது, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமன அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஓகேனக்கல் முதல் பாப்பிரெட்டிபட்டி வரை மூன்று நடைபயணம் மேற்கொண்டார்.

1983ல், கன்னியாகுமரியில் இருந்து 4,000 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை செய்து டெல்லி மகாத்மா காந்தி நினைவிடத்தில் யாத்திரையை நிறைவு செய்தார் ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர். பின்னர் 1990ல் நாட்டின் பிரதமராக உயர்ந்தார்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் அதிக நடைபயணங்களை மேற்கொண்டவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மதுவிலக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காவிரிப் பிரச்னை என பல பிரச்னைகளுக்காக நீண்ட தூர நடை பயணங்கள் மேற்கொண்டார். 1994 ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக என 1500 கி.மீ . தொலைவு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார்.

நதிநீர் இணைப்புக்காக ஒருமாத காலமும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தும் வைகோ நடைபயணம் மேற்கொண்டார்.

நடைபயணம் மேற்கொள்ளாவிட்டாலும் 1975 ல் சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய நெருக்கடி நிலைக்கு எதிரான சுற்றுப்பயணம், 1982-83 ஆம் ஆண்டுகளில் தெலுங்கு தேச கட்சியை ஆரம்பித்த என்.டி.ராமாராவின் ஆந்திரத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணம், 1989-90 களில் அத்வானியின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற ரத யாத்திரையும் அரசியலில் திருப்புமுனைகளை ஏற்படுத்தின. ஆனால் 2004 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாஜக தலைவரும், அன்றைய உள்துறை அமைச்சருமான அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை பாதியில் நின்று போனது தனிக்கதை.

2003 ஆந்திர மாநில சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியை அகற்ற வலியுறுத்தி எதிர்த்து 1,500 கி.மீ தூரம் பாத யாத்திரையை மேற்கொண்டார். 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வென்று, ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

2013 இல் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு 2013-ல் 1,700 கி.மீ தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

2016 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை இலக்காக வைத்து, நமக்கு நாமே என்ற முழக்கத்தை முன் வைத்து, அப்போது திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலினை களமிறக்கினார் திமுக தலைவர் மு.கருணாநிதி. கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் நிறைவடைந்தது ஸ்டாலின் நமக்கு நாமே நடை பயணம்.

2016 ல் திமுக ஆட்சியமைக்காவிட்டாலும் தேர்தலில் மிக அதிக இடங்களை வென்று சாதனை படைத்தது. ஸ்டாலினின் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல் நமக்கு நாமே நடை பயணம்.

2016 செப்டம்பரில் , காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி 26 நாட்கள் உத்தரப் பிரதேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். விவசாயிகள், பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆனாலும் சட்டமன்றத் தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

2017 செப்டம்பர் மாதம், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங், 3,300 கிமீ தூரம் நர்மதா நதிக்கரையில் நடைபயணத்தை ஆரம்பித்தார். 2018 டிசம்பரில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று கூட்டணி ஆட்சி அமைத்தது.

2017 நவம்பர் மாதம் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் சுமார் ஒரு வருடம்,3700 கி.மீ பாத யாத்திரையை மேற்கொண்டார். 2019 ல் தேர்தலில் வென்று தந்தை ராஜசேகர ரெட்டியை போல ,ஜெகன் மோகன் ரெட்டியும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார்.

காவிரி மீட்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் நடைபயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும். மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை அகற்ற மக்கள் ஆதரவை கோரியும், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி இன்று கன்னியாகுமரியில், ஒற்றுமை யாத்திரையை ஆரம்பிக்கிறார். 150 நாட்களில் , 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ,3570 கி.மீ தொலைவு நடைபயணமாக சென்று மக்களை சந்திக்கிறார். காஷ்மீரில் இந்த யாத்திரை நிறைவடைகிறது .2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் இந்த நடை பயணம், காங்கிரஸ் கட்டிக்கு புத்துணர்ச்சியை அளிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.