மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மதுபானக் கொள்கை வழக்கில் கைதான கே.சி.ஆர். கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த…

மதுபானக் கொள்கை வழக்கில் கைதான கே.சி.ஆர். கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகா் ராவின் மகளும்,  பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ந்தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார்.  இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் இன்றோடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கவிதாவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.  நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு கவிதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “இது ஒரு சட்டவிரோதமான வழக்கு. இதனை நாங்கள் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கவிதா இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்வெழுதவுள்ள தனது மகனை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதால், அதனை கருத்திற்கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம்,  ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.  மேலும், ஏப்ரல் 9-ஆம் தேதி வரை கவிதாவை நீதிமன்றக் காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.