ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 150 பேருக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆணையத்தில் நடைபெறும் விசாரணை என்பது எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தீர்ப்பின்படி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் போது எய்ம்ஸ் மருத்துவ குழு காணொளி காட்சி மூலமாக பங்கேற்றது. அவ்வாறு பங்கேற்று இருந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஆறுமுகசாமி ஆணையத்திடம் அவகாசம் கோரியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையும் அவசியம் என்பதால் அதனை பெற்ற பிறகு தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் ஆணையத்திற்கு 13-வது முறை வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 3 வார காலம் அவகாசம் கோரி தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு வழங்க உள்ள 3 வார கால அவகாசத்தில் எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை பெற்று, ஜெயலலிதா மரணம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








