அரசுப் பள்ளிக்கூடங்கள் கலை வளர்க்கும் இடமாக மாறுகிறது என்று நடிகர் குரு சோமசுந்தரம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசிய வீடியோவை பள்ளிக் கல்வித் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் நுண்கலைகளை கற்றுக் கொடுப்பதற்காக பாட வேளைகள் ஒதுக்கி இருப்பது குறித்து அறிந்தேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். அவர்களுடைய கற்பனை சக்தி வளரும்.
நாடகத் துறையில் இருப்பதால் 12 வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற ஒரு பிரிவு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று சில முயற்சிகளை முன்னெடுத்தேன். அதற்கான பாடத் திட்டங்களை எப்படி உருவாக்குவது என்பது குறித்தெல்லாம் யோசித்து இருக்கிறேன்.
பொம்மலாட்டம், பறை, உடுக்கு, கரகாட்டம் ஆகியவற்றை கற்றுக் கொள்ள முடியும். பரதநாட்டியம், பனை ஓலையில் கூடை பிண்ணுதல், வரைதல், பொம்மை செய்தல், குறும்படங்களை இயக்குதல் இவற்றையெல்லாம் செய்ய முடியும். தெரு கூத்து, பொம்மலாட்டம், தோல் பாவை கூத்து போன்ற அரங்க நிகழ்த்துக் கலையெல்லாம் கூட கற்றுக் கொள்ள முடியும்.
இதெல்லாம் மென்மேலும் வளர வேண்டுமென்றால் நாமும் சில உதவிகளை செய்ய வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். பேசினால் போதும். கலந்துரையாடினால் போதும். சமூக வலைதளங்களில் இதுகுறித்து எழுதினால் கூட போதும். அப்போது #ArtandCultureInTNGovtSchools இந்த ஹாஷ் டேக்கையும் சேர்த்துவிடுங்கள். மிக்க நன்றி என்று அந்த வீடியோவில் குரு சோமசுந்தரம் பேசியுள்ளார்.








