பதவி கொடுத்த ஓபிஎஸ்….கட்சியிலிருந்தே நீக்கிய இபிஎஸ்….

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேரை அதிமுகவிலிருந்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகக் கூறி அதிமுகவிலிருந்து…

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 15 பேரை அதிமுகவிலிருந்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.

கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகக் கூறி அதிமுகவிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான  எடப்பாடி பழனிசாமி இன்று அக்கட்சியின் பல்வேறு பிரிவுகளில் இணை மற்றும் துணைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்கள் உள்பட 15 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்படுவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் கு.ப.கிருஷ்ணன் கட்சியிலிருந்தே நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அதிமுக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்களான C.ராஜேந்திரன்,  M.பாரதியார் மற்றும் சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளரான சீனிவாசன் ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து மட்டும் 5 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவின் திருச்சி மண்டல துணைச் செயலாளர் ராமச்சந்திரன், திருச்சி மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதரன் ராவ், சென்னை மண்டலச் செயலாளர் சுஜைனி, சென்னை மண்டல துணைச் செயலாளர் விஜய் பாரத், சென்னை மண்டல துணைச் செயலாளர் மோகனப் பிரியா ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்படுவதாக  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அண்ணா தொழிற்சங்க மின்சாரப்பிரிவு பொருளாளர் ஜி.மோகன், திருச்சி புறநகர் தெற்கு  மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் ராஜ்மோகன், அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் ஆம்னி பஸ் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் சிவா, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ராஜலட்சுமி ஆகியோரையும் அதிமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.