லியோ படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவ. 1ம் தேதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.
ரசிகர்களின் கலவையான விமர்சனங்களுடன் ‘லியோ’ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் பிளே-லிஸ்ட்டில் ரிபீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘லியோ’ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது.
ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம், ஓரிரு நாட்களில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆஃபீசை லியோ கலங்கடித்து வருவதால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து மீம்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் நவம்பர் 1 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோவின் வெற்றிவிழாவை நடத்த Seven Screen Studio திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லியோ திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.







