கழிவுநீரால் கறுப்பாக மாறிய தாமிரபரணி…நியூஸ் 7 தமிழ் செய்தியால் உடனடியாக தடுத்து நிறுத்தம்…

நெல்லையில் தாமிரபரணி நதியில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து,  மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கழிவுநீர் கலப்பு…

நெல்லையில் தாமிரபரணி நதியில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து,  மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கழிவுநீர் கலப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. 

தமிழ்நாட்டின் ஒரே ஜீவநதியான,  பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி, வட இந்தியாவில் பாய்ந்தோடும் கங்கை நதிக்கு இணையாகப் போற்றப்படுகிறது.  மேலும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில்,  பாபநாசம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றி,  அந்த மாவட்டத்திற்குள்ளேயே பாய்ந்தோடி, கடலில் கலக்கும் சிறப்பும் உடையது.  நெல்லை,  தென்காசி,  தூத்துக்குடி,  விருதுநகர்,  ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்தும்,  வேளாண்மையை செழிக்கச் செய்தும்,  ஆன்மிக அன்பர்களின் உள்ளங்களைக் குளிர்வித்தும் வரும் தாமிரபணி ஆறு, தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தாமிரபரணி நதி பாய்ந்தோடும் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலந்துவிடப்படுகிறது.  இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாநகராட்சிக்கு உள்பட்ட மேலப்பாளையம்,  பாளையங் கால்வாயில் செல்லும் கழிவுநீர் முழுவதும்,  தாமிரபரணியில் திருப்பி விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பாளையங்கால் வாயில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக,  தண்ணீர் தேங்குவதால், அதை தாமிரபரணியில் திருப்பி விட்டுள்ளனர் அதிகாரிகள்.

இதனால் மாசடைந்து,  பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி, கருமை நிறத்தில் தாமிரபரணி காணப்படுகிறது.  இதுதொடர்பான காட்சிகளை நியூஸ் 7 தமிழ் இன்று ஒளிபரப்பியது.  அதன் எதிரொலியாக, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

அதையடுத்து, நெல்லை மாநகராட்சி ஆணையர், நெல்லை கோட்டாட்சியர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர், தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கும் இடங்களை ஆய்வுசெய்தனர்.

அதன்பின்,  செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்றும்,  பாதாள சாக்கடை திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.  அப்போது, அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு,  அப்பகுதி மக்கள் கழிவு நீர் கலப்பதை உடடினயாக தடுத்து நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் தொடர்ந்து செய்தியை ஒளிபரப்பதால்,  தாமிரபரணியில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நிறுத்தப்பட்டது.  இதற்காக நியூஸ் 7 தமிழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.