கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட
எச்சம் வயல் பகுதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவி சீலா. இவர் கூடலூர் அரசு
கலைக்கல்லூரியில் பயின்று வரும் நிலையில் கூடலூர் பகுதியில் பகுதி நேர வேலை
பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்தவுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீடு
திரும்பி உள்ளார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை இருசக்கர
வாகனத்தில் சென்ற சீலாவை மிகுந்த ஆக்குரோசத்துடன் சீறிப்பாய்ந்து தாக்கியுள்ளது.
இதில் காயமடைந்த சீலாவை மீட்ட அப்பகுதி மக்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடலூரிலிருந்து ஸ்ரீ மதுரை செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக இரவு
நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களைச் சிறுத்தை ஒன்று தாக்க
முயலும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் பொதுமக்களைத் தாக்கும் அந்த சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து
வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்
என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் போராட்டத்தில்
ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.







