திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை வனவிலங்கு தாக்கி தூக்கி
சென்று கடித்து குதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை நேற்று இரவு
வனவிலங்கு ஒன்று தூக்கி சென்று கடித்து குதறியதி. நேற்று இரவு நடைபெற்ற இந்த
சம்பவத்தில் அந்த சிறுமி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பதி மலையில்
தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, போலீஸ் அதிகாரிகள், வனத்துறை
அதிகாரிகள், விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தாவது..
” வனவிலங்கு தாக்கி சிறுமி உயிர் இழந்தது மிகவும் வருத்தத்திற்கு உரியது. அந்த சிறுமி பாதயாத்திரையாக செல்லும்போது பலமுறை தாய், தந்தையரை தவிர்த்து
மலைப்பாதையில் தனியாக நடந்து சென்றது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெரிய
வந்துள்ளது.
மலைப்பாதையில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். 500 சிசிடிவி கேமராக்களை
பொருத்தி வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் சிறுத்தையா, கரடியா என்பது சரியாக தெரியவில்லை. திருப்பதி மலை நடைபாதையில் உள்ள காலிகோபுரம் முதல் நரசிம்ம சுவாமி கோவில் வரை வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எனவே இந்த பகுதியை ஹை அலர்ட் பகுதியாக அறிவித்திருக்கிறோம். நடந்து மலை ஏறி செல்லும் பக்தர்கள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடனும் குழந்தைகளை பாதுகாப்புடனும் அழைத்து செல்ல வேண்டும். ஹை அலர்ட் பகுதியில் 10 மீட்டருக்கு ஒரு பாதுகாப்பு ஊழியரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது இரவு 10 மணி வரை அலிப்பிரி நடைபாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நேரத்தை மாற்றி அமைப்பது பற்றி தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என தர்மா ரெட்டி தெரிவித்தார்.







