29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெறும் தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர் குண்டு வெடிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர். ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். நாங்கள் வன்முறையை கைக்கொள்ளும் எத்தரப்பிற்கும் எதிரானவர்கள். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடலாம் என நினைப்பவர்களை மக்கள் நீதி மய்யமும், நானும் வன்மையாக எதிர்க்கிறோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,

”நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதும்கூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில், மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒருபுறம், இசுலாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப் பலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம், மாநிலம் முழுமைக்கும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்டச் சதியின் செயல்பாட்டு வடிவமேயாகும்.

திமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காதுவிட்டதன் விளைவாகவே, ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், மதவாதத்தை எதிர்ப்பதாகப் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகம், சட்டப்போராட்டமென செயல்பாட்டளவில் பாஜகவோடு இணங்கிப்போகும் திமுக அரசின் பாதகச்செயல் பச்சை சந்தர்ப்பவாதமாகும்.

தாங்களே தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி, தங்களது வாகனத்தை எரித்து அரசியல் இலாபமீட்ட முயன்ற பாஜகவின் நிர்வாகிகளது முந்தையச் செயல்பாடுகள் யாவும் சமகாலச் சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறப்புக்கவனம் செலுத்தி, மதப்பிளவுகளும், வன்முறைச்செயல்களும் நடைபெறாவண்ணம் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும் , அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகவுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

பெட்ரொல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்ற காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading