மல்யுத்த வீரர்கள் மீது பாய்ந்த வழக்குகள் – நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? என வினேஷ் போகத் கேள்வி

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட வழக்கில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட வழக்கில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 38 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், ஜன்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட, வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட விவகாரத்தில், போராட்டத்தை முன்னெடுத்து சென்ற முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக் , வினேஷ் போகட் மற்றும் போராட்டத்தின் மற்ற அமைப்பாளர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 147, 149, 186, 188, 332, 353, பிடிபிபி சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், தன் மீதும், சக மல்யுத்த வீரர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். மல்யுத்தக் கூட்டமைப்பு ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதிலும், தனக்கும், சக மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா , வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் சாக்ஷி மாலிக் போராடுவோம் வெற்றி பெறுவோம்… இந்த நாட்களும் கடந்து போகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், இது தொடர்பாக வினேஷ் போகத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். “மல்யுத்த வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷண் மீது டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய ஏழு நாட்கள் ஆகும். அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய ஏழு மணி நேரம் கூட ஆகவில்லை. இந்த நாட்டில் சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதா? இந்த அரசு தனது வீரர்களை எப்படி நடத்துகிறது என்பதை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார் .

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.