ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் அவரை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதனை ஏற்கமறுத்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தாம்தான் தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருகிறார். அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவரை இடைக்காலப் பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டிருந்தனர்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கையொப்பம் இட்டு தாக்கல் செய்த 2021-2022ம் ஆண்டுக்கான அதிமுகவின் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றதும் அதிமுகவில் இபிஎஸ் கை ஓங்கியிருப்பதை உணர்தியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றும் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்கும் இந்திய சட்ட ஆணையம், இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளது.







