ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக இடைக்கால பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் திமுக அரசின் ஆட்சியில் நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 16 மாத கால ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்றவை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நிலைமை மிக மிக மோசமாகிவிட்டது. இதனால், மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளும் கட்சியினரின் அராஜகமோ எல்லை மீறிப் போய்விட்டது. தறிகெட்டு ஓடும் குதிரைகள் போல், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள். திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் சொன்னபோது அவருடைய தொண்டர்களுக்கு கோபம் வந்தது.
ஆனால், இப்போது அவரே தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை நாடே பார்த்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகக் காவல் துறைத் தலைவர், ஆபரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2,390 ரவுடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றம் எப்போதெல்லாம் கூட்டப்படும் என்ற செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோல் பல காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறும். இப்படி ஆபரேஷன் மின்னல் பற்றியும், இதன்காரணமாக ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.