உதகையில் வனவிலங்கு கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உதகையில் கோடை சீசன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில் நீலகிரி உயர் சூழல் மண்டலம் குறித்த புகைப்படக் கண்காட்சி துவங்கியது. நீலகிரியில் உள்ள வன விலங்குகள், பறவைகள், நீரோடைகள், வண்ணத்துப்பூச்சி போன்ற புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
மலைமாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. அதன்படி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன், கோடை சீசன் துவங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயிர்ச்சூழல் மண்டலத்தை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அரங்கில் புகைப்பட கண்காட்சி வனத்துறை சார்பில் நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் நீலகிரி வனப்பகுதியில் வாழும் புலிகள், சிறுத்தை புலி, கடமான், காட்டெருமைகள், நீலகிரி லங்கூர் குரங்குகள், சிங்கவால் குரங்குகள், மலபார் அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள், அதில் உற்பத்தியாகும் நீரோடைகள் போன்ற புகைப்படங்களை இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த புகைப்படம் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இன்று முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், மாவட்ட வன உதவி பாதுகாவலர் சரவணகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர் .இந்த கண்காட்சி சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி புகைப்பட கலைஞர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: