லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 29 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், நேற்று காலை 8.12 மணியளவில் லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். தொடர் தீவிர சிகிச்சையில் இருந்த லதா மங்கேஷ்கருக்கு, பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
வார விடுமுறைக்கு பின்பு கூடிய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூட்டத்தில், இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்பு, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, மாநிலங்களவையின் நிகழ்வுகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இவரின் இறப்புக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.