பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் 2 நாட்களுக்கு இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 29 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 8.12 மணியளவில் லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். தொடர் தீவிர சிகிச்சையில் இருந்த லதா மங்கேஷ்கருக்கு, பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று மற்றும் நாளை 2 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும் அதே போன்று அலுவல் ரீதியான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.







