‘பெல்பாட்டம்’ என்ற இந்திப் படத்தில் நடிகை லாரா தத்தா, இந்திரா காந்தியாகவே மாறியிருப் பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன் 2’ படத்தில் நடித்திருந்தார். இவர் இப்போது நடித்துள்ள படத்துக்கு ’பெல்பாட்டம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். 1980 ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில், வாணி கபூர், ஹூமா குரேஸி, லாரா தத்தா, அடில் ஹூசைன், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக, பிரபல இந்தி நடிகை லாரா தத்தா நடித்துள்ளார். ரஞ்சித் எம் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப் பட்டது. இதில் யாரும் நம்ப முடியாத வகையில் இந்திரா காந்தியாகவே, லாரா தத்தா மாறியிருக்கிறார்.
இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லாரா தத்தா, டிரைலரில், நான் இருக்கிறேன் என்றாலும் யாராலும் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்வி உண்மைதான். அவர்தானா என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.
இதை நெட்டிசன்ஸ் ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். சிலர், யாருப்பா அந்த மேக்கப்மேன். அவருக்கு ஒரு தேசிய விருதை கொடுங்க’ என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்தப் படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.








