நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி  உள்ளிட்டோரை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  1996-2001-ம் ஆண்டுகளில் பொன்முடி அமைச்சராக  இருந்தபோது அரசுக்கு  சொந்தமான 3,630 சதுரஅடி நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.…

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி  உள்ளிட்டோரை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
1996-2001-ம் ஆண்டுகளில் பொன்முடி அமைச்சராக  இருந்தபோது அரசுக்கு  சொந்தமான 3,630 சதுரஅடி நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து  2003-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அமைச்சர் பொன்முடி தனது மாமியார் பெயருக்கு பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமனற்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பொன்முடி மனு தாக்கல் செய்தார்.  இதனையடுத்து பொன்முடி உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் வழக்கில்  இருந்து விடுவித்து 2007ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம்  பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
இதனையடுத்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது  பொன்முடி உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, பொன்முடி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்த நீதிபதி, அனைவரையும் வழக்கில் இருந்து  விடுவித்து தீர்ப்பளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.