பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களிடம் பாமக தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை கருத்துக் கேட்கவுள்ளார்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் தோராய மதிப்பீட்டில், 4,751 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமையவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, விரைவில் நிலம் கையப்படுத்தும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்வுக்கு சந்தை விலையைவிட மிகவும் கூடுதலான இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பால், பாதிக்கப்படும் மக்களிடம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை கருத்துக் கேட்கவுள்ளார்.
இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவில் நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், பரந்தூர் பகுதி மக்களிடம் ஒருவித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் நிலங்களைப் பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்கி, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நாளை நடத்துகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் நாளை (25.08.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள அனைத்து கிராம மக்களிடமும் கருத்துகளை கேட்டறிய உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








