தேசதுரோக சட்டம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் வரை சட்டப்பிரிவு 124A-ன் கீழ் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசதுரோக சட்டம், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124A-ன் கீழ் கடந்த 152 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் இந்த சட்டம் தேவைதானா என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு, இந்த சட்டத்தின் அவசியம் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், எனவே, இவ்விஷயத்தில் முடிவெடுக்க அரசுக்கு கால அவகாசம் தேவை என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரசின் பதிலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மத்திய அரசு முடிவெடுக்கும் வரை சட்டப்பிரிவு 124A-ன் கீழ் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள், உரிய நீதிமன்றத்தை நாடி பிணை உள்ளிட்ட நிவாரணங்களைப் பெறலாம் என்றும், புதிதாக இந்தப் பிரிவின் கீழ் எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
அப்படி பதிவு செய்யப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தேவையற்ற சட்டங்களை நீக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கும் உறுதி குறித்து உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதாகக் கூறிய கிரண் ரிஜிஜூ, அதேநேரத்தில், லட்சுமண ரேகை அனைவராலும் மதிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்தார். அதாவது, உச்சநீதிமன்றம் தனது வரம்பை மீறி செயல்படக் கூடாது என்பதை இதன்மூலம் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அவரது இந்த கருத்தால், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு விஷயத்தில் மத்திய அரசு அதிருப்தி அடைந்திருப்பது வெளிப்பட்டுள்ளது.








