கடைசி நேரத்தில் சமரசம்; காங்கிரஸிலிருந்து விலகும் முடிவை கைவிட்ட கே.வி.தங்கபாலு?

தான் பிறப்பால் காங்கிரஸ்காரன் எனவும் தன்னுடைய இறுதி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன் எனவும் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

தான் பிறப்பால் காங்கிரஸ்காரன் எனவும் தன்னுடைய இறுதி மூச்சு வரை காங்கிரஸ்
கட்சியில் தான் இருப்பேன் எனவும் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.வி.தங்கபாலு, தமிழ்நாட்டிற்கு முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை பெற்றுத்தந்தவர் காமராஜர் எனவும் அதனால் பின்தங்கிய மக்கள் பலர் வளர்ந்து வருவதாகவும் கூறினார்.
பின்தங்கிய மக்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என மத்திய அரசு அறிவித்து இருப்பதாகவும் சமூகநீதி கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கும்
கட்சியான திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் எனவும் தங்கபாலு கோரிக்கை விடுத்தார்.

 

தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சி ஆதரவோடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தங்கபாலு கேட்டுக்கொண்டார். அனைத்து சமூக மக்களுக்கும் சமமான பங்களிப்பை வழங்குவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும் எனவும் இந்த பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது என்பதால் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்திக்காமல் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்திப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் தங்கபாலு தெரிவித்தார்.

இதனிடையே, தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்து பேசுவதற்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதாக தகவல் பரவியது. அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு தான் பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு தங்கபாலு வந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமை அவரை சமாதானப் படுத்தியதாகவும் அதனால் அவர் அந்த முடிவை கைவிட்டு விட்டு திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கே.வி.தங்கபாலு அதற்கு பதிலளிக்காமல் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.