தென்பெண்ணையில் அதிக அளவு திறக்கப்படும் கர்நாடக ஆலைகளின் ரசாயன கழிவுகள்! – ஆற்றில் பொங்கி வரும் நுரையால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூரிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஆற்றுநீருடன் அதிகளவில் ரசாயன கழிவுகள் கலந்து வந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் கவலையடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரையடுத்து கெலவரப்பள்ளி நீர்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது தென்பெண்ணை…

கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூரிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஆற்றுநீருடன் அதிகளவில் ரசாயன கழிவுகள் கலந்து வந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் கவலையடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரையடுத்து கெலவரப்பள்ளி நீர்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டமானது 41.66 அடி உள்ள முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு சில அடிகளே உள்ளது.அணைக்கு நீர் வரத்தானது 410 கன அடியாக உள்ள நிலையில் அந்த நீர் அப்படியேயே அணையின் இரு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பை நம்பியே கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமில்லாது சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் நம்பி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீரானது மாசு பட்ட நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் எப்போதெல்லாம் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதோ அப்போதெல்லம் ஆற்றங்கரையையொட்டிய கர்நாடக மாநில தொழிற்சாலைகள் தங்களின் கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளன.தற்போதும் அதேபோன்று நிகழ்ந்திருப்பதால் தென்பெண்ணை ஆற்று நீரானது வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போன்று காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் அதிகளவில் நீரில் நுரை எழும்பி வருவதால் இதனை பயன்படுத்துவோர்க்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.