புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித்தன்மை: ஆய்வு செய்கிறது ஐஐடி

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் வீடுகளின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி ஆய்வு செய்கிறது.  சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இங்கு முதல் பகுதி…

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் வீடுகளின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி ஆய்வு செய்கிறது. 

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இங்கு முதல் பகுதி குடியிருப்பானது 112.16 கோடி ரூபாய் செலவில் ஒன்பது அடுக்குகளை 864 வீடுகளைக் கொண்டுள்ளது. இன்னொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1056 வீடுகள் உள்ளன. புதிய வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பயனாளிகள் கூறுகின்றனர்.

கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்புகள் கொரோனா தொற்று அதிகமிருந்த காலத்தில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டன. அப்போது நோயாளிகளுக்கு படுக்கைகள் போன்றவற்றை எடுத்துச் சென்றபோது குடியிருப்புகள் சேதம் அடைந்ததாக சொல்கின்றனர். சேதத்தை பார்வையிட வந்த எழும்பூர் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனை சூழ்ந்து நின்று மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதையடுத்து, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என தெரிவித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஐஐடியிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆய்வு அறிக்கையை ஐ.ஐ.டி வழங்கிய பின்னர், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதன் பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, போதிய அளவு பாதுகாப்பு இருந்தால் மட்டுமே பொதுமக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.