கோவை அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 250 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 30 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கோவை அரிசிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் காலை 5 மணி முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்திருந்தனர். ஆனால் 30 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் 250 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும். தடுப்பூசி போடக் கூடுதல் டோக்கன் வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என சுகாதார துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக இன்று 100 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.







