சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 10 கேள்விகள் கொண்ட ஒரு கடித்தை கோட்டூர்புரம் போலீசார் அளித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதை தொடர்ந்து, வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஸ் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரீஷ் ஆம்பூரில் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் பட்டம் வழங்குவது போன்று பொது நிகழ்ச்சி நடந்துள்ளதும், இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததும் ஹரீஸிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 10 கேள்விகள் கொண்ட ஒரு கடித்தை கோட்டூர்புரம் போலீசார் அளித்துள்ளனர். அந்த கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்க வேண்டும் என கோட்டூர்புரம் போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளிக்கும்பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் போலி டாக்டர் பட்டம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
-ம.பவித்ரா








