தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பீகார் மாநில உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் சென்னையில் அந்த மாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள் எனவும் போலியான தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், துரிதமாக செயல்பட்ட காவல்துறை வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததோடு, போலி செய்திகளை பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவும் செய்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில ஊழியர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் வட இந்திய ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரவிய நிலையில் பீகார் மாநில உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த 4-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு செய்த அக்குழுவினர் சென்னையில் பீகார் மாநிலத் தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். பீகார் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதற்கான கூட்டத்தில் பீகார் மாநிலத் தொழிலாளர்களின் நிலவரம் குறித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்தனர்.
தமிழ்நாட்டில் அவர்களுடைய பணிச் சூழல், இருப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் கேட்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பீகார் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் பேசிய அவர்கள் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு பீகார் மாநில உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் தங்கள் அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கு முன்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










