திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் ரத விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திரு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் ரத ஊர்வல விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மாசி…

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திரு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் ரத ஊர்வல விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா நேற்று பூத்த மலர் அலங்காரத்துடன் தொடங்கியது.  விழாவின் இரண்டாவது நாளான இன்று  பூச்சொரிதல் ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

இந்த திருவிழா 54-வது ஆண்டு திருவிழாவாகும்.  ஊர்வலத்தில் முருகன்,  விநாயகர், சரஸ்வதி,  லட்சுமி,  புல்லாங்குழல் கிருஷ்ணன்,  ஐயப்பன்,  விஸ்வரூப சிவலிங்கம் ஆகிய தெய்வங்களுடன்,  அன்னை கோட்டை மாரியம்மன் லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோலாட்டம், மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனை ஆங்காங்கே லட்சக்கணக்கான வண்ணப்பூக்களோடு காத்திருந்த பக்தர்கள் வரவேற்று பூத்தூவி வழிபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.