சென்னை தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையின் ஓர் அடையாளமாக திகழும் கூவம் ஆறு குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சென்னையை பற்றி பேசும் போது, பொதுவாகவே “அய்யய்யோ, சென்னையா? அது கூவம் நாத்தம் அதிகம்
இருக்கிற ஊராச்சே” என்று முகம் சுழித்து பேசுவது உண்டு. ஆனால் சமீப காலமாக சென்னையில் கூவம் மற்றும் மீதம் இருக்க கூடிய ஆறுகள் சரிவர பராமரிக்கப்பட்டு வருவது, சென்னை மேல் உள்ள பார்வையை ஓரளவு மாற்றி இருக்கிறது.
சென்னை தினத்தை முன்னிட்டு சென்னையின் அடையாளங்களாக விளங்க கூடிய பலவற்றை நாம் பெருமையாக பேசும்போது, கூவம் ஆற்றை கடந்து போகும் நாம், ஏன் கூவம் ஆற்றை மறந்து போக வேண்டும்? ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது அதன் நதிக்கரை நாகரீகத்தை கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது. சென்னையின் நகரமயமாக்கல் கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் மூலம் தான் சாத்தியமானது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?
கூவம் ஆறானது 75 கிலோ மீட்டர் தூரமும், கொசஸ்தலை ஆறு 136 கிலோ மீட்டர் தூரமும், அடையாறு ஆறு 42.5 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து, கடலில் கலக்கிறது. ஆனால் கடலில் கலப்பதற்குள் எத்தனையோ கழிவுகளை சுமந்து செல்கின்றன இந்த ஆறுகள். இருப்பினும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் ஆற்றின் நிலை என்ன தெரியுமா? முற்காலத்தில் மீன் பிடிப்பதற்கும், படகு சவாரிக்கு புகழ்பெற்ற இடமாக இருந்தது கூவம் ஆறு, நாலனா காசு விழுந்தால் கூட எடுத்து விடலாம் என்கிற அளவுக்கு தெளிவான தண்ணீர் ஓடி வந்த நிலையில், அடையாறு ஆற்றின் ஓரத்தில் உள்ள சித்ரா நகர், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கீரை மற்றும் காய்கறி விவசாயம் நடந்த கதைகளும் உண்டு.
குடிப்பதற்கும் பஞ்சம் இல்லாத வகையில் தண்ணீர் வரத்து நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர் நீண்டகாலமாக வசிக்கும் ஆற்றங்கரை மக்கள். வளர்ச்சி பெருக பெருக, வீழ்ச்சி பெருகும் என்பது போல, பெரும் முதலீட்டு நிறுவனங்கள் முதல், மருத்துவ நிறுவனங்கள் வரை, அவ்வப்போது கழிவுகளை கூவம் மற்றும் மற்ற ஆறுகளில் கலப்பதால், காலப்போக்கில் கடல் நீரையே விஷமாக்கும் விதத்தில் மாசு அடைந்ததாக பார்க்கப்படுகிறது.
கூவம் ஆறு மாசு படுத்தப்பட்டு கழிவு நீர் கால்வாயாக அசுத்தப்படுத்தப் பட்டுவிட்டது என வேதனை தெரிவித்த சென்னை வாசிகள், இருப்பினும் என்றாவது ஒருநாள் மாறுமா? மாற்றப்படுமா என்பதே தங்களின் எதிர்ப்பார்ப்பு என சொல்லி நகர்கின்றனர்.
– இரா.நம்பிராஜன்









