பிரதமர் மோடியை, பாபாசாகேப் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் கடந்த வாரம் முழுவதும் இணையவாசிகள் மட்டும் அல்லாது வெகுசன மக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் இளையராஜா. இந்நிலையில் ‘குறுக்கே இந்த கௌசிக் வந்தா..!’ என்பது போல் ஒரு மாஸ் எண்ட்ரியை கொடுத்தார் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர் மற்றும் முன்னாள் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான கே.பாக்யராஜ்.
பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், ‘இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை’ என்று பாராட்டு வாசித்தார்.
மேலும், “பிரதமர் மோடியை விமர்சனம் செய்கிறவர்கள் எல்லாம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்” என்று ஒரே போடாக போட்டார் பாக்யராஜ். இந்த செய்தி இணையத்தில் முதலில் பரவியதுமே, ‘ச்சே ச்சே! ஒரு உன்னத கலைஞன் இப்படியெல்லாம் பேசுவாரா..? நிச்சயம் fake news(பொய் செய்தி)-ஆ தான் இருக்கும்’ என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை தான் fake ஆக்கினார் பாக்கியராஜ். அந்த கலைநயம் மிக்க கருத்துக்களை உதிர்த்தவர் சாட்சாத் பாக்யராஜே தான் என்று வீடியோவுடன் செய்திகள் வெளியாயின.
நிற்க, நேற்றைய முன் தினம் விழா ஒன்றில் திரைபட விமர்சகர்களை கடுமையாக விமர்சித்தார் நடிகர் ‘ஆரி’. அவருக்கு பதிலடி கொடுத்த பாக்கியராஜ், ‘விமர்சனங்கள் கடுமையாக இருந்தாலும் கலைஞர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்கள் தீர்ப்பே சரியானது’ என்ற முத்துக்களை உதிர்த்திருந்தார். அதே வாயால் தான் பிரதமரை விமர்சிக்கும் மக்களை குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார். ஒரு கலைப்படைப்பையே விமர்சனங்கள் தான் செழுமையாக்கும் என நம்பும் பாக்கியராஜ், கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியை மட்டும் விமர்சனங்களுக்கும் அப்பால் கொண்டு நிறுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.
மேலும், விமர்சனம் என்றால் என்ன?. அரசு மற்றும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை பாராட்டுவது, குறைகளை சுட்டிக்காட்டுவது இவை இரண்டுமே விமர்சனங்கள் தானே! அப்படி பார்த்தால் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டிப் புகழும் பாக்கியராஜின் கருத்துக்களும் ஒரு வகையான விமர்சனம் தானே. ஆக, விமர்சனங்கள் பற்றிய பாக்கியராஜின் கருத்து அவருக்கும் பொருந்துமா? என்று கேட்கும் விமர்சகர்கள், பாக்கியராஜுக்கு பாக்கியராஜின் விமர்சனங்கள் குறித்து எவ்வளவு கோவம் இருந்தாலும் கூட பாக்கியராஜை பற்றி பாக்கியராஜே இப்படியான விமர்சனங்கள் வைத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிடுகின்றனர்.
அதுமட்டுமல்லாது, ஒருவரின் பிறப்பை பற்றி பேசுவதும், உடல் குறைபாடுகளை ஒப்பிட்டு விமர்சனம் செய்வது அடிப்படை அறமற்ற செயல் எனவும், ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல், பத்திரிகையின் ஒன்றின் ஆசிரியராகவும் இருக்கும் பாக்யராஜுக்கு இது கூடவா தெரியாது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. பாக்யராஜ் ட்விட்டர் பக்கத்தின் bio(பயோ) குறிப்பில், ‘நிர்வாணமாக இருக்க முயற்சிக்கிறேன் …எண்ணத்தால்,பேச்சால், செயல்களால்.. இன்னும் அனைத்தாலும்!’என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்காணும் போது உத்தம புத்திரன் படத்தில் தனுஷை பார்த்து விவேக் சொல்லும் ‘அதுக்குன்னு அவ்ளோ மேல இல்லப்பா!’ என்ற வசனமும் நமக்கு ஞாபகம் வராமல் இல்லை என்று நெட்டிசன்கள் வறுத்தனர்.
இந்நிலையில், பாக்யராஜின் மகனான சாந்தனு ‘ஸ்டெர்லைட்’ போராட்ட சமயத்தில் பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் முன் வைத்த விமர்சனங்களை பகிர்ந்த பலர், அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதே போல் தான் இளையராஜாவின் கருத்துக்கள் சர்ச்சையான போது யுவனின் ‘நான் கருப்பு திராவிடன்’ எனும் ஹார்ஷ்டேக்-ஐ ட்ரெண்ட் செய்தனர். அவர் கருப்பு சட்டை அணிந்துகொண்டு அந்த பதிவை பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து சாந்தனு யுவனுக்கு போன் செய்து, அந்த கருப்பு சட்டையையும், லுங்கியையும் எங்க வாங்குனீங்க, நமக்கும் ஒன்னு தேவப்படுது’ என்று கேட்பது போல் கற்பனையான மீம்ஸ்களையும் கலந்தடித்தனர் இணையவாசிகள்.
Dear Modi ji , it would be nice if you could share your remarks on “your” people being brutally murdered ! #SterliteIssue https://t.co/dOKuKFoZ1a
— Shanthnu (@imKBRshanthnu) May 24, 2018
அதுமட்டுமல்லாமல் ‘All over the world அப்பாக்கள் அப்படிதான் இருப்பாங்க. நாமதான் பக்காவா அதை சரி பண்ணனும்’ போன்ற வார்த்தைகளை கொண்டும் மீம்ஸ்கள் பறந்தன. இப்படி ஒட்டிமொத்த இணையமே ‘ரவுண்டு’ கட்டி விமர்சிக்க, அதுகுறித்து நாம் கட்டுரை எழுதிக்கொண்டிருக்க, ‘மன்னிப்பு கோரினார் பாக்யராஜ்’ என்ற பிரேக்கிங் செய்திகள் தொலைக்காட்சிகளை அலங்கரித்தன.
இந்த மன்னிப்பு என்பது விமர்சகர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல, பாக்யராஜால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாக்யராஜுக்கும் கிடைத்த வெற்றி தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ‘மன்னிக்குறவங்க மனுஷங்க, மன்னிப்பு கேக்குறவங்க பெரிய மனுஷங்க’ எனும் அரிய தத்துவத்தை கூறிக்கொண்டு, இத்துடன் இந்த செய்தியை முடித்துக்கொள்கிறோம். நன்றி..வணக்கம்!







