சென்னையில் தனது இரண்டரை வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் இருவரும் குழந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளுக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பானு (28). இவருக்கும்
விமல் ராஜ் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த
நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பானு, விமல்ராஜை விட்டு பிரிந்து,
இரண்டாவதாக ஜெகன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
பானு தனது தாயார் கன்னியம்மாள் கடந்த வியாழக்கிழமை இரவு போன் செய்து, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என கூறியுள்ளார். கன்னியம்மாள் வந்து பார்த்தபோது, பெண் குழந்தையின் நெற்றியில் சிகரெட் சூடு காயம் இருந்தது. அதேபோல குழந்தையின் உடலில் பல இடங்களில் பலமாக தாக்கிய காயங்களும் இருந்தன. இதையடுத்து கன்னியம்மாள் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை நடத்தினர். இதில் பானு, அவரது இரண்டாவது கணவர் ஜெகன் இருவரும் குடிபோதையில் குழந்தையை அடித்ததுடன், சூடு வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குழந்தையை நெருப்பு வைத்து தாக்கியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து( 324 IPC, 75,) பானு ,ஜெகன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.








