முகநூலில் பழகி சிறுமி கடத்தல்; ஒருவர் போக்சோவில் கைது

முகநூலில் பழகி 14 வயது சிறுமியை கடத்தி சென்றவரை போக்சோ சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் இவர் முகநூலில் பல பெண்களுடன் சாட்டிங்…

முகநூலில் பழகி 14 வயது சிறுமியை கடத்தி சென்றவரை போக்சோ சட்டத்தின் கீழ்  போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் இவர் முகநூலில் பல பெண்களுடன் சாட்டிங் செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் முகநூலில் லால்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போய் உள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர்கள், உறவினர்கள் சிறுமியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் அந்த சிறுமி பயன்படுத்திய செல்போனை பார்த்த போது சிறுமியுடன் அரவிந்த் என்பவர் அடிக்கடி பேசி வந்ததும், ஆபாசமாக பேசி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த பெற்றோர்கள் அரவிந்த் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை என்பதால் பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக காவல் நடவடிக்கை மேற்கொண்ட ஆய்வாளர் ஏழுமலை ஸ்ரீமுஷ்ணத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சில நாட்களுக்கு முன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று ஸ்ரீமுஷ்ணத்திலுள்ள உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும், பின்னர் போலீசார் தேடுதல் வேட்டை அறிந்து, ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சிறுமியை ஏற்காட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து ஏற்காடு சென்று போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற அரவிந்த்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.