நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 6 மாத குழந்தையை 4 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கொல்லத்தில் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் முத்துராஜ். இவா வடசேரி பேருந்து நிலையத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது குழந்தை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக விசாரித்த போது அந்த பெண் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொல்லம் விரைந்த தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை கடத்தி சென்ற சாந்தி என்ற பெண்ணை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







