கேரள மாநிலம் திருவனந்தபுரம் வன விலங்கு பூங்காவில் ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டிற்கு மாற்றும் போது இரு குரங்குகள் தப்பியோடின. குரங்குகளை தேடும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகப்புகழ்பெற்ற தேசிய வன விலங்குகள் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் இங்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த வன விலங்குகளை பராமரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக பூங்காவிலுள்ள இரு குரங்குகளை ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டிற்கு ஊழியர்கள் மாற்ற முயன்ற போது பூங்காவில் உள்ள மதில் சுவர் மீது ஏறி இரு குரங்குகளும் தப்பியோடிவிட்டன.
அவற்றை ஊழியர்கள் பிடிக்க முயன்றும் இயலவில்லை.குரங்குகள் அதிக சேட்டை செய்பவை என்பதால் குரங்குகளை பிடிக்கும் வரையில் பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வன விலங்கு பூங்கா ஊழியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குரங்குகளை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது.
வேந்தன்







