பாஸ்போர்ட் வைப்பதற்கான கவர் ஆர்டர் செய்திருந்த இளைஞருக்கு நிஜ பார்போர்ட் டுடன் கவரை அளித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது அமேசான்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள கனியம்பேட்டாவைச் சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர், பாஸ்போர்ட் வைப்பதற்கான கவர் ஒன்றை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் ஆர்டர் செய்திருந்தார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அவர் கேட்டிருந்தார். இரண்டு நாட்களில் அனுப்பி இருந்தது அமேசான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆசையாக கவரைப் பிரித்துப் பார்த்தவருக்கு ஆச்சரியம். உள்ளே பாஸ்போர்ட்டுடன் இருந்தது கவர்! ஒரு வேளை டம்மி பாஸ்போர்ட்டை வைத்து அனுப்பி இருப்பார்களோ என நினைத்தார். ஆனால், அது திருச்சூரைச் சேர்ந்த முகமது சலிஹ் என்பவருக்கு சொந்தமான பாஸ்போர்ட் என்பது பின்னர் தெரியவந்தது.
உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவைக்குத் தொடர்பு கொண்டு பதட்டத்தோடு விஷயத்தைச் சொன்னார். ‘அப்படியா… சரிங்க, இனும நாங்க கவனமா பார்த்துக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு முடித்துக் கொண்டனர். ஆனால், மிதுன் பாபு, அமேசானை போல அப்படியே விட்டுவிடவில்லை.
பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை கண்டுபிடித்து முகமது சலிஹ்-கை கண்டுபிடித்து அவரிடம் அதை கொடுத்தார். இதுபற்றி மிதுன் பாபு கூறும்போது, ’முகமது சலிஹும் என்னைப் போலவே, பாஸ்போர்ட் கவருக்கு ஆர்டர் செய்திருந்தார். வாங்கிப் பார்த்து அதில் பாஸ்போர்ட்டை வைத்துப் பார்த்தார். அது அவருக்கு திருப்தியாக இல்லை. இதனால், அப்படியே அமேசானுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
உள்ளே வைத்த பாஸ்போர்ட்டை அவர் திருப்பி எடுக்க மறந்துவிட்டார். ஆனால், அதை சரிபார்க்காத அமேசான் ஊழியர்கள், நான் கேட்டதும் திரும்பி வந்த அந்த கவரை, அப்படியே எனக்கு பார்சல் செய்து அனுப்பிவிட்டனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட பார்க்காமல் அனுப்பிய அமேசான் ஊழியர்களின் செயல் அதிர்ச்சியாக இருக்கிறது. அதோடு அடுத்து என்ன செய்யலாம் என்பதை கூட சரியாக சொல்லாமல் பொறுப்பில்லாமல் சேவை மைய ஊழியர்கள் நடந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது என்றார்.
கடந்த மாதம் எர்ணாகுளம் அருகிலுள்ள ஆலுவா பகுதியில் இருந்து ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஒரு சோப்பும் ரூ.5 ரூபாயையும் அனுப்பியிருந்தது அமேசான் என்பது குறிப்பிடத்தக்கது.