சென்னையில் தற்போது வரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி சென்னையில் உருவாகும் பட்டாசு குப்பையை 24 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டு இருந்தார். இந்த பணிகளுக்காக ஏற்கனவே உள்ள வாகனங்களை தவிர்த்து, கூடுதலாக 33 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதன்படி இன்று காலை வரை சென்னை மாநகராட்சி பகுதியில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இன்றும், நாளையும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகற்றப்பட்ட பட்டாசு கழிவுகள் அனைத்தும் உடனடியாக கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொற்சாலை வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகள் மேலாண்மை மையத்தில் ஒப்படைத்து பாதுகாப்பான முறையில் அகற்றப்படும். சென்னையில் கடந்த ஆண்டு 87 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.








